Wednesday 11 August 2010

சிவனே அனைத்திற்கும் மூலாதாரம்.

முதல்வனாகிய சிவபரம்பொருள் அனைத்தையும் அறிவோன், முற்றறிவுடையன் (சர்வக்ஞன்), என வேதாகமங்களும் திருமுறைகளும் உரைக்க, மணிவாசகர் அவர்மேல் அறியமையொன்றை ஏற்றி உரைக்கின்றார். சிவன் அறியாத ஒன்று உண்டு. அதுதான் “தன் பெருமையைத் தான் அறியாத் தன்மை”!

சிவபெருமான் பேராற்றலும் பெருந்தலைமையும் உடைய மகாதேவன். எனினும் ‘காடுடைய சுடலைப் பொடிபூசி’ ‘தோலுடுத்து’ ‘நஞ்சுண்டு’, கூட்டொருவர் இல்லாமல் “தான் தனியனாக” இருக்கின்றான். அவன் தேவர்களுக்கெல்லம் தேவன் என்றால், தன் பெருமைக்குத் தகுந்தபடி பட்டுப் பீதாம்பரம் உடுத்தி, அடிசிலும் அமுதமும் அல்லவோ உணவாகக் கொண்டிருக்க வேண்டும்? நஞ்சை அமுதமாக உண்பானோ?. பித்தேறியவன் தான் தன்னந்தனியனாக அலைவான். சான்றோன் கலைஞானம் உடையவன் தன்னையொத்த சான்றோர் கூட்டத்தில் இருப்பதையே விரும்புவான். இத்தகைய மாறுபட்ட இயல்புகளை உடைய சிவன் எங்ஙனம் முதல்வனாவான்?

இந்த ஐயங்களுக்கு மறுமொழியாகத் திருவாசகத்தில் திருச்சாழல் என்னும் பதிகத்தில், ஒரு பெண்,

“எம்பெருமான் ஏது உடுத்து அங்கு ஏது அமுது செய்திடினும்,
தன் பெருமை தான் அறியாத் தன்மையன்”

என்று கூறுகின்றாள்.

“எங்கள் சிவபெருமான் தன்னுடைய ஆடையாகப் பீதாம்பரத்தையோ அன்றித் தோலாடையையோ எதை அணிந்து கொண்டாலும், அறுசுவை உண்டியையோ அல்லது ஆலகால நஞ்சையோ எதைத் தன் உணவாகக் கொண்டாலும், அந்த உடை உணவு ஆகியவற்றால் வரும் பெருமை சிறுமைகளைப் பொருட்படுத்தாதவன்;. அவன், உயிர்களின்மேல் கொண்ட பேரருள் ஒன்றைமட்டுமே திருவுள்ளம் கொள்பவன்; அவனுடைய பெருங்கருணையையும் பேராற்றலையும் அவன் இருப்பிடமும் உடுத்த தோலும் உண்ட நஞ்சும் சுட்டுவன “ என்னும் கருத்தை அப்பெண்ணின் சொற்கள் விளக்குகின்றன.

கோயில் சுடுகாடு:

சிவன் பேரரசன். மஹாராஜாதி ராஜன். என்றால் அவனுக்குக் கோயில் ஜெய்பூர் அரண்மனை, மைசூர் அரண்மனைபோல சகல ஆடம்பரங்களும் கூடியதாக அல்லவா இருக்க வேண்டும்? அச்சமும் வெறுப்பும் தருவதாகிய சுடுகாடு அவனுக்கு எப்படிப் பெருமைதரும் கோயிலாகும் என்பது கேள்வி.

தோள்மேல் கங்காளம்:

சிவன் தோளிலும் மார்பிலும் சிரத்திலும் கரத்திலும் தரித்தும் தாங்கியும் இருப்பன சுடர்விடும் நவரத்தினங்கள் பொருத்தப்பட்ட விலைமதிப்புள்ள அணிகலன்கள் அல்ல. அவை நரம்புகளால் கோக்கப்பட்ட எலும்பு மாலைகள்.

எலும்பு முதலியவற்றை அறியாமல் தீண்டிவிட்டாலே உடனே நீராடித் தூய்மை செய்து கொள்ள வேண்டும். அப்படியிருக்கச் சிவன் மார்பில் நரம்பு ஓடு எலும்புமாலை அணிந்து , தோள்மேல் கங்காளம் (முழு எலும்புக்கூடு) தாங்கியுள்ளானே, இதில் என்ன பெருமை? என்பது கேள்வி.

சுடலைப் பொடி பூசி-

சுடுகாட்டு மண்ணை மிதித்துவந்தாலே உடனே நீரில் மூழ்கித் தூய்மை செய்து கொள்ள வேண்டும். சிவனோ, சுடுகாட்டுச் சாம்பலையே மேனி முழுதும் பூசி நிற்கின்றானே , இதிலென்ன பெருமை.?

இந்தக் கேள்விகளையே கந்த புராணத்தில் தக்கனும் கேட்டான்.

உங்கள் பரன் என்னும் மேலோன்,
‘கானிற் சிந்தும் என்பொடு சிரத்தொகை அணியுமோ?’
‘தேவர் வெந்த சாம்பரும் பூசுமோ?’
‘கரிந்த தீயுடல் ஏந்தியே கானில், ஈந்த கேசமும் தரிக்குமோ?’
‘உலகம் அழிந்திடும்படி உயிர்களை முடிக்குமோ உங்கள் அமலன்?’

கோயில் சுடுகாடு –

உள்ள பொருள்தான் தோன்றும். இதனைச் ‘சற்காரிய வாதம்’ என்று சைவம் பேசும். காட்சிப் பொருளாக உள்ள பொருள்கள் அனைத்தும் செயப்படுபொருள்கள்; காரியப் பொருள்கள். அவை பேரூழி முடிவில் அழியும். அழிதல் என்பது இல்லாமலே போவதன்று. காரியம் முதற்காரணத்தில் அடங்குவதே அழிதல்; முதற் காரணத்திலின்று காரியமாதலே, தோன்றுதல். சட்டி உடைந்தால் மண்ணாகின்றது. மண்ணிலிருந்து மீண்டும் சட்டி பிறக்கின்றது.

உலகம் சடம் . தானாகப் பிறக்கவும் செய்யாது. தானாக அழியவும் செய்யாது. அதனைப் பிறப்பிக்கவும் ஒடுக்கவும் ஒருவன் வேண்டும். அனைத்தையும் ஒடுக்கியவன் எவனோ அவனே மீளத் தோற்றவும் செய்வான். எனவே அவனை ‘ஒடுங்கி’ எனச் சாத்திரம் கூறும்.

பிரபஞ்சம் அனைத்தும் சர்வ சங்காரகாலத்தில் மாயையில் ஒடுங்கும். மாயை சிவசத்தியைச் சார்ந்து இறைவன் திருவடியில் அவனுடைய வைப்பு சக்தி அல்லது வேண்டும்போது பயன்படுத்திக் கொள்ளும் சத்தியாக நிற்கும். சிவசத்தி பிரிப்பின்றி அவனில் ஒடுங்கி நிற்கும். எனவே அனைத்தும் அவனில் ஒடுங்கிய நிலையில் அவன் ஒருவனே இருப்பன்.

அனைத்தும் ஒடுங்கிய நிலையே இங்கு ‘ சுடுகாடு’ என்றும் அந்த நிலையில் அவன் மட்டும் இருத்தலையே ‘தான் தனியன்’ என்றும் கூறப்பட்டன.

சத்தியும் அவனுள் ஒடுங்குதலையும் வேண்டும்பொழுது பிரிந்து தோன்றுதலையும் சங்க இலக்கியம், ”பெண் உரு ஒருதிறன் ஆகின்று, அவ்வுருத் தன்னுள் கரக்கினும் கரக்கும்’ என்று கூறிற்று. சிவனது திருவடியில் ஒடுங்கிய மாயையிலிருந்து, அத்திருவடிச் சார்பால் பிரபஞ்சம் அனைத்தும் மீளத்தோன்றும் புனர் உற்பவத்தை,

“நீல மேனி வாலிழைபாகத்து
ஒருவன் இருதால் நிழற்கீழ்
மூவகை உலகும் முகிழ்த்தன முறையே” (ஐங்குறுநூறு)

என்றும்,

“வரிகிளர் வயமான் உரிவை தைஇய
யாழ்கெழு மணிமிடற் றந்தணன்
தாணிழல் தவிர்ந்தன்றால் உலகே” (அகநானூறு)

என்றும் சங்க இலக்கியங்கள் பேசின.

சுடலைப்பொடி பூசி:

சர்வ சங்காரகாலத்தில் பிரமன், திருமால் போன்றோர் உட்பட அனைவரின் உடல்களும் அவரவர் ஆட்சி செய்த உலகங்களும் அனைத்தும் எரிந்து சாம்பலாகும். உமையம்மையும் சிவனுள் கரந்து விடுவாள். தனித்து நிற்பவன் சிவன் ஒருவனே. எரிந்த சாம்பல் முழுவதும் சென்றுபடிவதற்கு வேறு இடம் இல்லாதபடியினால் சிவபெருமான் திருமேனியிலேயே படியும். சர்வ சங்காரத்தின் பின்னும் உலகுக்குச் சிவனே சார்பு என்பதையே ‘சுடலைப் பொடி பூசி’ என்னும் தொடர் உணர்த்துகின்றது. இந்தச் சாம்பல் ஆதி நீறு எனப்படும். இந்த ஆதி விபூதியை, நல்லந்துவனார் என்னும் சங்கப் புலவர், கலித்தொகைக் கடவுள் வாழ்த்துப் பாடலில், ‘மதுகையால் நீறணிந்து” என்று புகழ்ந்தார். திருநீறே சங்க இலக்கியத்தில் வெளிப்படும் முதற் சமயச் சின்னம்.

இன்னொரு விபூதியும் உண்டு. அது அனாதி விபூதி எனப்படும். அது இறைவன் மேல் இயல்பாக உள்ள திருநீறு. நெருப்புத் தணல் மீது இயல்பாகவே வெண்மையான சாம்பல் படியும். வீசினால் சாம்பல் கலையும், மீண்டும் படியும். முடிவில் தணல் இன்றி சாம்பலே மிஞ்சும். சிவனுக்கு எனத் தனியாகத் திருமேனி இல்லை. அவன் தாங்கும் திருமேனிகள் அவனுடைய திருவருளால் வேண்டும்போது கொள்வனவாகும். திருவருளே சிவசத்தி.அதுவே அம்பிகை. அவனுடைய திருவருளாகிய அம்பிகையே அவனுடைய வடிவம் என்று உணர்த்துவது இந்தத் திருநீறு. இதனைத் திருஞானசம்பந்தர் திருநீற்றுப் பதிகத்தில் ‘பராவண மாவது நீறு’ என்று ஓதியருளினார். பரன் என்பதற்குப் பெண்பால் பரை. பரையாகிய சிவசத்தியின் வண்ணமே திருநீறு. திருநீறு அணிதல் சிவசத்தியாகிய சிவனருளுடன் கூடியிருத்தலை உணர்த்தும்.

தோலுடுத்தல்:

தாருகவனத்து முனிவர்கள் வைதிகர்களானாலும் தங்களது வேதக்கல்வியையும் கன்மம் செய்யும் ஆற்றலையும் வியந்து கர்வம் கொண்டு சிவபரம்பொருளின் முழுமுதற்றன்மையை மறுத்துச் சிவனை அழிப்பதற்கு ஒரு அபிசார வேள்வி நிகழ்த்தினர். அந்த வேள்வியிலிருந்து புலியும் யானையும் சிங்கமும் வந்தன. புலியைக் கொன்று அதன் உரியை அரையில் தரித்துக் கொண்டான். யானையைக் கொன்று அதன் தோலை மேலே போர்வையாகப் போர்த்துக் கொண்டான். மான்தோல் சிங்கத் தோல்களை ஏகாசமாக அணிந்து கொண்டான். ஏகாசம் என்பது மேலாடையைத் தோளினின்றும் மார்பில் விரிந்து வரும்படி அமைத்துப் பூணூல் போல அலங்காரமாக அணிவது.

எனவே, இவன் நாகரிகமற்றவர்கள் போன்று தோலாடை தரித்தவனல்லன். இவன் உடுத்த தோலாடை இவன் வேதங்கூறும் கன்மகாண்டங்களுக்கும் அப்பாலான், கன்ம பலனை ஊட்டும் அதிகாரி அவனே என்பதனை உணர்த்தும்.

கங்காளம் தோள் மேல் காதலித்தான்:


பிட்சாடனர் (கங்கைகொண்ட சோழபுரம்)
கங்காளம் என்பது முழு எலும்புக்கூடு. ஊழிக்காலத்தில் தானே முதல்வன் என்றுணர்த்த படைப்புக் கடவுளர், காத்தற்கடவுளர் ஆகியோரின் முழு எலும்புக் கூடுகளை இறைவன் தன் இரு தோள்களிலும் விரும்பித் தாங்குவன் எனத் திருமுறைகளும் புராணங்களும் கூறுகின்றன.

படைப்புக் கடவுள், காத்தற்கடவுள் ஆகியோரின் காயங்களைச் (எலும்புக் கூடுகளை) சிவபெருமான் தன்தோள்மேல் ஏற்றிக் கொள்வதால் அவர் காயாரோகணர் எனப் புகழப்படுகிறார். இந்த மூர்த்தம் சிறந்து விளங்கும் திருத்தலம் காயாரோகணம் எனப்படும். இந்த வரலாறு காஞ்சிப்புராணம் காயாரோகணப் படலத்தில் கூறப்படுகின்றது.

இதனால் பிறவாயாக்கைப் பெரியோனாகிய சிவனைத் தவிரப் பிற தேவரெல்லாம் செத்துப் பிறக்கும் ஆன்மவர்க்கங்கள் என்றும் சிவம் ஒன்றே நித்தியப் பொருள் என்றும் உணர்த்தப் பெற்றது.

கபாலத்தில் இரந்துண்பவன்:

சிவனுக்கும் ஐந்து முகம். பிரமனுக்கும் ஐந்துமுகம். அதனால் பிரமன் தானே முழுமுதற் கடவுள் என்ற் கர்வங்கொண்டு திருமாலுடன் கலகமிட்டான். அவன் நடுத்தலையின் முகம் சிவபெருமானை இகழ்ந்து நிந்தித்தது.

“உலகி னுக்குயான் ஒருவ னேஇறை;
உலகம் என்கணே உதித்து ஒடுங்கிடும்
உலகெ லாம்எனை வழிபட் டும்பர்மேல்
உலகி னைத்தலைப் படும்’”

என்று பிரமனின் உச்சித்தலை சிவனை இகழ்ந்து உரைத்தது.

பிரமனுடைய செருக்கை அடக்கி அவனை வாழ்விக்க வேண்டி இறைவன் வைரவக் கடவுளை (பைரவர்) அனுப்பினான். பைரவர் பிரமனின் நடுத்தலையை நகத்தாற் கிள்ளிக் கபாலமாகக் கைக்கொண்டார். அந்த பிரமகபாலம் ஏந்தியவனாகச் சிவபெருமான் ஊழிக்காலத்தில் ஆடுங் கூத்திற்குக் காபாலம் என்றுபெயர். இதனைக் கலித்தொகை என்னும் சங்க இலக்கியம்,

“மண்டமர் பலகடந்து மதுகையால் நீறணிந்து
பண்டரங்கம் ஆடுங்கால்”

என்றும்,

“கொலையுழுவைத் தோலசைஇக் கொன்றைத்தார் சுவல்புரள
தலைஅங்கை கொண்டுநீ காபாலம் ஆடுங்கால்”

என்றும் புகழ்ந்து பேசுகின்றது.

பிரம கபாலத்தில் இறைவன் இரந்த செய்தி புராணங்களில் பேசப்படுகின்றது. அவன் வறுமையால் இரக்கவில்லை. இரந்து பெற்ற உணவை அவன் உண்டதாகவும் புராணங்களில் பேசப்படவில்லை. அவன் இரந்தது குருதிப்பலி. குருதி அகந்தை, கர்வத்தைக் குறிக்கும்.

அவன் இரந்த செய்தியையும் இரந்த பொருளையும் திருமந்திரம் பேசுகின்றது.

“பரந்துல கேழும் படைத்த பிரானை
இரந்துணி என்பர் எற்றுக்கு இரக்கும்?
நிரந்தர மாக நினையும் அடியார்
இரந்துண்டு தன்கழல் எட்டச் செய்தானே.”

பிச்சையதேற்றான் பிரமன் தலையினில்
பிச்சைய தேற்றான் பிரியாதறஞ் செய்யப்
பிச்சைய தேற்றான் பிரமன் சிரங்காட்டிப்
பிச்சைய தேற்றான் பிரான்பர மாகவே”

எனத் திருமூலர் தெருட்டுகின்றார்.

கட்டுரையில் காட்டப்பட்ட செய்திகள் எல்லாம் கந்தபுராணம், காஞ்சிப்புராணம் முதலிய புராணங்களில் சிவபரத்துவத்தை விளக்கக் கூறப்பட்ட கதைகளே.


நன்றி தமிழிந்து வலைதளம்

1 comment: