Tuesday 22 April 2014

பள்ளி கொண்ட பரமேஸ்வரன்


பரந்தாமனான மகாவிஷ்ணுவைத்தான் பள்ளி கொண்ட திருக்கோலத்தில் தரிசிக்க முடியும். ஆனால், சுருட்டப்பள்ளிக்குச் சென்றால் பரமேஸ்வரனும் பள்ளி கொண்டிருக்கும் திருக்கோலத்தை தரிசிக்கலாம்.

தமிழக – ஆந்திரா எல்லை பகுதியில் ஊத்துக்கோட்டை அருகே இந்த சுருட்டப்பள்ளி அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் `பள்ளி கொண்டீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். இங்கு சிவபெருமான், உமாதேவியின் மடியில் தலை வைத்துப் படுத்திருக்கும் திருக்கோலத்தை காணும்போது நம்மை அறியாமலேயே பக்தி பரவசத்தில் திளைக்கிறோம். பள்ளி கொண்டுள்ள இறைவனுக்கு அருகில் மகாவிஷ்ணு, மார்க்கண்டேயர், நாரதர், பிருகு முனிவர், பிரம்மா ஆகியோர் வணங்கி நிற்கிறார்கள்.    அவர்களுக்கு அருகில் சூரிய, சந்திரர்கள், குபேரன், சப்த ரிஷிகள் மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்கள், கின்னரர், கிம்புருடர் போன்றோரும் சிவனை வணங்கி பிரார்த்தனை செய்கிறார்கள்.


கோவில் தல வரலாறு
தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்தபோது அமுதம் வருவதற்கு முன் ஆலகால விஷம் வந்தது. அனைவரும் அஞ்சி ஓடியபோது மகாவிஷ்ணு அருகில் சென்றார். விஷ நெடி தாக்கியதில் அவரது மேனி நீல நிறமானது. இதுபற்றி அனைவரும் சிவபெருமானிடம் முறையிட்டார்கள்.
அதன்தொடர்ச்சியாக சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தினார். பக்கத்தில் இருந்த பார்வதிதேவி, பதறிப் போனாள். தன் கணவனின் கழுத்தை இறுக்கி பிடித்தாள். இதனால் ஆலகால விஷம் அவரது கழுத்தைத் தாண்டாமல் கண்டமாகிய கழுத்தில் நீல நிறத்தில் நின்று விட்டது. சிவனும் `திருநீலகண்டன்’ ஆனார்.


இதன்பிறகு, சிவபெருமானும் அன்னை பார்வதிதேவியும் கைலாயம் நோக்கி புறப்பட்டார்கள். செல்லும் வழியில் சோலைகள் நிறைந்த இன்றைய சுருட்டப்பள்ளியில் இருவரும் தங்கினார்கள். விஷ மயக்கம் தீராமல் இருக்கவே… சிவபெருமான், உமாதேவியின் மடியில் தலை வைத்து சிறிது நேரம் கண் அயர்ந்தார்.


பரமன் பள்ளி கொண்டது தெரிய வந்ததும் இந்த அதிசயத்தைப் பார்த்து வணங்கத் தேவர்கள் அனைவரும் சுருட்டப்பள்ளிக்கு விரைந்து வந்து விட்டார்கள். அவர்களிடம் நந்தி பகவான், மயக்கம் தெளிந்தபின் பரமேஸ்வரனை வழிபடலாம் என்று அறிவுறுத்தினார்.



தன்னை நாடி வந்தோருக்காக சிவபெருமான் இந்த மாலைக் காலத்தில்-சந்தியா நேரத்தில் எழுந்தருளினார். ஆனந்த நடனம் ஆடினார். தேவர்கள் அவரை தரிசித்து மகிழ்ந்தார்கள் என்கிறது இக்கோவில் தல வரலாறு. பள்ளி கொண்டுள்ள சுருட்டப்பள்ளி இறைவனை தேடி வந்து வணங்கினால் சகல தோஷமும் நீங்கும் என்கிறார்கள்.

விஜய நகரத்து மன்னர் ஹரிஹர புக்கரால் பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு இத்திருக்கோயில் கட்டப்பட்டதால் சைவத்திருமறையில் இடம்பெறவில்லை.


வால்மீகேஸ்வரர்(வால்மீகி பூஜித்த லிங்கம்) ராமலிங்கேஸ்வரர் (ராமர் பூஜித்த லிங்கம்) லிங்கோத்பவர்( லிங்கதில் சிவன் நிற்கிறார்) ,கௌரி ஸ்மேத தக்சிணாமூர்த்தி மற்றும் சப்த மாதாக்களும் இத்திருக்கோயிலின் சிறப்பு. இத்திருக்கோயிலில் பள்ளிக்கொண்டீஸ்வரர் சர்வமங்கள (பார்வதி) மடியில் சயனத்தில் காட்சியளிக்கிறார்.இதே போல் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதரை பார்க்கலாம்.சிவனை இங்கே (சுருட்டப்பள்ளி) மட்டும் தான் காண முடியும்.

அன்புடன்
சிவனருள் பதிவன்


காசியில் கார்த்திகேயன் ஆலயம் (முருகன் கோயில்) ???

காசியில் கார்த்திகேயன் ஆலயம் (முருகன் கோயில்)

 நண்பர்களே நான் காசிக்கு இதுவரை இரண்டு முறை போயுள்ளேன். ஆனால் கார்த்திகேயன் ஆலயத்தை தரிசிக்க முடியவில்லை. அங்குள்ள மக்களுக்கு அந்த ஆலயத்தைப்பற்றி அவ்வளவாக தெரியவில்லை.

தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

அடுத்தமுறை போகும்போது தரிசிக்க உதவியாக இருக்கும்

அன்புடன்
சிவனருள் பதிவன்